அமராவதி: ஆந்திரா மாநிலத்தில் செயல்பட்டு வரும் ரசாயன ஆலையில் நள்ளிரவில்  ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலியாகி உள்ளதாகவும் ஏராளமானோர் படுகாயம் அடைந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. உயிரிழந்தோர் குடும்பத்துக்கு மாநில அரசு ரூ.25 லட்சம் நிவாரண நிதி அறிவித்து உள்ளது.

ஆந்திர மாநிலம் எலுரு மாவட்டம் அக்கிரெட்டிகுடிம் என்ற பகுதியில் ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் பல்வேறு ரசாயனங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. வழக்கமாக நேற்று இரவு பணியாளர்கள்பணிகளை மேற்கொண்டு வந்தனர். அப்போது, தொழிற்சாலையில் இருந்து திடீரென ர நைட்ரிக் அமிலம், மோனோமெத்தனால் உள்ளிட்ட ரசாயனங்கள் கசிந்ததது. இதனால் திடீர் தீ விபத்து ஏற்பட்டு தொழிற்சாலை முழுவதும் வேகமாக பரவியது.

இதுகுறித்து உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதுடன், மற்ற ஊழியர்களும் தீயில் இருந்து சக பணியாளர்களை காப்பாற்ற முயற்சித்தனர். இந்தவிபத்தில் 6 பேர் தீயில் கருவி உயரிழந்து உள்ளதாகவும், 12 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு உள்ளதாகவும்,  ஏலூர் எஸ்பி ராகுல் தேவ் சர்மா தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தீ விபத்தில் 2 தளங்கள் முற்றிலும் எரிந்து போயுள்ளன.  உயிரிழந்தவர்களில் 4 பேர் பீகாரை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் கவர்னர் பிஸ்வாபூஷண் ஹரிசந்தன் ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
இதனை தொடர்ந்து, முதல்-மந்திரி வெளியிட்டுள்ள செய்தியில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.  படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சமும், லேசான அளவில் காயமுற்றோருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடும் வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளார்.