டெல்லி: பருத்தி இறக்குமதிக்கான சுங்க வரியை முழுமையாக ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ரத்தானது செப்டம்பர் மாதம் வரை மட்டுமே என்பதையும் தெரிவித்து உள்ளது.

தற்போது பஞ்சு இறக்குமதிக்கு 5 சதவீத அடிப்படை சுங்கவரியும், 5 சதவீத வேளாண்மை உள்கட்டமைப்பு மேம்பாட்டு வரியும் விதிக்கப்படுகின்றன. இதனால் நூல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. உள்நாட்டில் விலையைக் குறைக்கும்வகையில் இந்த வரிகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுவந்தது.  பருத்தி மற்றும் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று ஜவுளித்துறை உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில்,பருத்தி இறக்குமதிக்கான சுங்க வரி மத்திய அரசால் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.  வருகிற செப்டம்பர் 30-ந் தேதி வரை பஞ்சு இறக்குமதிக்கான சுங்கவரி ரத்து செய்யப்படுவதாக நிதி அமைச்சகம் அறிவித்தது. இந்த முடிவால், ஜவுளித் தொழில்துறையும், நுகர்வோரும் பயனடைவார்கள் என்று கருதப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து,த மிழகத்தில் இயங்கி வரும் தொழிற்சங்கங்கள் மற்றும் பாஜகவின் வேண்டுகோளை ஏற்று இறக்குமதி வரியை ரத்து செய்ததற்காக பிரதமர் மோடி மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மேலும், இது நம் மாநிலத்திற்கு மத்திய அரசு வழங்கிய தமிழ்ப் புத்தாண்டு பரிசு என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.