நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலைப் பள்ளியில் மதமாற்ற சர்ச்சையில் சிக்கிய அரசு ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். இந்த விவகாரத்தில் மாநில அரசு சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பாஜக தலையிடும் என மாநில தலைவர் அண்ணா மலை கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி ஆசிரியை ஒருவர் மாணவியிடம் மதம்மாற சொல்லி வலியுறுத்துவது தொடர்பான விசாரணை விடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், அந்த ஆசிரியை கல்வித்துறை தற்காலிக இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கண்ணாட்டுவிளை பகுதியில் அமைந்துள்ளது அரசு மேல்நிலைப்பள்ளியில் எராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். தையல் கலை ஆசிரியராக பணியாற்றும் கிறிஸ்தவ ஆசிரியை ஒருவர், தையல் வகுப்புக்கு வரும் இந்து மத மாணவிகளிடம் இந்துமத கடவுள்களை அவதூறாக பேசியும், வகுப்பு நேரத்தில் கிறிஸ்தவ மத பிராத்தனைகளை சொல்லி பிராத்தனை செய்ய வற்புறுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இதுதொடர்பாக மாணவிகள் பெற்றோரிடம் கூறி, அவர்கள் மூலம் காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசாரும் விசாரணை நடத்தியதில் மாணவிகள் ஆசிரியையின் நடவடிக்கை குறித்த குற்றச்சாட்டை அடுக்கினர். இந்த நிலையில் தலைமை ஆசிரியர் முன் போலீசார் மாணவி ஒருவரிடம் விசாரணை நடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலானது. அதில் மாணவிகள் மதமாற்றம் குறித்து ஆசிரியை மீது புகார் அளித்தனர்.
இந்த வீடியோ வைரலான நிலையில், சம்பத்தப்பட்ட ஆசிரியையிடம் விசாரணை நடத்தி அவர் மீது துறைவாரி நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சி தலைவர் உத்தரவிட்டுள்ளதாகவும் இதற்காக மாவட்ட கல்வி அலுவலர் எம்பெருமாள் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைக்கு பின் துறைவாரி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மதமாற்ற சர்ச்சையில் சிக்கிய அரசு ஆசிரியை தற்காலி பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக மாவட்ட கல்வி அலுவலர் எம்பெருமாள் உத்தர விட்டுள்ளா். அரசு பள்ளி ஆசிரியை ஒருவரே மதமாற்ற சர்ச்சையில் சிக்கி உள்ள சம்பவம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, கன்னியாகுமரி மாவட்டம் கண்ணாட்டுவிளையில் கட்டாய மதமாற்றம் பேசுபொருளாகி இருக்கின்றது. தமிழகத்தை பொறுத்தவரை கட்டாய மதமாற்றம் தொடர்ந்து நடைபெறுகின்றது. இன்று கண்ணாட்டுவிளையில் மாணவி கொடுத்துள்ள புகார் மற்றொரு சான்று. மகாத்மா காந்தியே மதமாற்றம் பெரிய அபாயம் என்று சொல்லி இருக்கின்றார். கண்ணாட்டுவிளை விவகாரத்தை மாநில அரசு மூடி மறைக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மதத்தை எதற்கு பள்ளி அறைக்கு கொண்டு வருகின்றார்கள் என்பதை அரசு விசாரிக்க வேண்டும். கட்டாய மதமாற்றம் செய்யகூடாது. காது கேளாத அரசுக்கு இது எப்படி கேட்கும் என்று விமர்சித்த அண்ணாமலை, கன்னியாகுமரி விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அதில் பா.ஜ.க தலையிடும் என்று கூறினார்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மதமாற்ற சர்ச்சைகளும் எழுந்து வருகின்றன. கடந்த 10 வருடங்களாக அமைதிப்பூங்காவாக இருந்து வந்த தமிழகம் தற்போது பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி விவாதப்பொருளாகி வருகின்றன. ஏராளமான பாலியல் புகார்கள், எழுந்துள்ள நலையில், கடந்த சில மாதங்களுக்க முன்பு தஞ்சாவூர் மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தில் மதமாற்றமும் ஒரு பிரச்சினையாக கூறப்பட்டது.,அந்த விவகாரத்தில் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகளின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கை நீதிமன்றங்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.