சென்னை: மதுபானக் கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள பார்களுக்கு டெண்டர் விட டாஸ்மாக் நிறுவனத்துக்கு இடைக்கால அனுமதி வழங்கி சென்னை உயர்நீதி மன்றம் அமர்வு உத்தரவிட்டு உள்ளது.
டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்த பார்கள் நடத்த தமிழகஅரசு டெண்டர் கோரியிருந்தது. இந்த டெண்டரில் முறைகேடுகள் நடந்திருப்பதாக பார் உரிமையாளர்கள் சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்னிலை யில் நடைபெற்று வந்த நிலையில் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளோடு இணைந்து செயல்பட்டு வரும் பார்களை 6 மாதத்திற்குள் மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி சரவணன் அதிரடி உத்தரவிட்டிருந்தார்.
இதை எதிர்த்து, டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் உயர்நீதிமன்ற அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி முனிஸ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது.
இன்றைய விசாரணையைத் தொடர்ந்து, சில்லறை மதுபானக் கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள பார்களுக்கு டெண்டர் விடுவதற்கு டாஸ்மாக் நிர்வாகத்துக்கு இடைக்கால அனுமதி அளித்துள்ளது;
டாஸ்மாக் மதுக்கடைகளை நடத்த முடியாது என்று கூறிய தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது