சென்னை: தமிழ்நாட்டில் சொத்துவரி உயர்வுக்கு மத்தியஅரசே காரணம் என அமைச்சர் நேரு விளக்கம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் இன்று திடீரென சொத்து வரி உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளது. குறைந்தபட்சம் 25 சதவிகிதம் முதல் 150 சதவிகிதம் வரை உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக அரசின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு, சொத்து வரி உயர்வை மார்ச் 31-ஆம் தேதிக்குள் மேற்கொள்ளவில்லை என்றால் மத்திய அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய சுமார் ரூ.15,000 கோடி நிதியினை வழங்க மாட்டோம் என நிர்பந்தம் கொடுத்தது. அதனால்தான், சொத்துவரி உயர்த்தப்பட்டு உள்ளது என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் சொத்து வரியை உயர்த்தினால் மட்டுமே தமிழகத்துக்கு வர வேண்டிய உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி விடுவிக்கப்படும் என ஒன்றிய அரசு கூறியதாலேயே வரி உயர்வு விதிக்கப்பட்டது. 15ஆவது நிதிக்குழு வரி உயர்வை விதிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் 200 சதவீதம் சொத்து வரியை உயர்த்தினர். தேர்தல் வந்ததால் தாங்கள் வெளியிட்ட சொத்துவரி உயர்வை அவர்கள் நிறுத்தி வைத்தனர். அதிமுக ஆட்சியின்போது ஏழை, பணக்காரர்கள் என்று இல்லாமல், ஒரே வகையில் வரி உயர்வு செய்யப்பட்டது.
ஆனால் தமிழக முதல்வர் ஏழைகளுக்கு குறைவாகவும், கொஞ்சம் வசதி படைத்தவர்களுக்கு 1800 சதுர அடிக்கு மேல் உள்ள கட்டிடங்களுக்கு கூடுதலாகவும் வரியை உயர்த்தி இருக்கிறார். சென்னையில் உள்ள 54 லட்சம் பேரில் முக்கால்வாசி பேர் 600 சதுர அடிக்கு குறைவான இடத்தில் வசிக்கின்றனர். அவர்களுக்கு இதுவரை 100 ரூபாய் வரி என்றால், தற்போது ரூ.125 என்கிற அளவில் வரி உயர்த்தப்பட்டுள்ளது.
1800 சதுர அடிக்கு மேல் இருப்பவர்களுக்கு 50 சதவீத உயர்வும், அதே 1800 சதுர அடிக்கு மேல் முக்கிய வீதிகளில் வசிப்பவர்களுக்கு 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஸ்லாப் சிஸ்டத்தின் அடிப்படையில்தான் இந்த வரி உயர்த்தப்பட்டிருக்கு. எனவே மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் வரி உயர்வு மிகமிகக் குறைவாகவே இருக்கிறது.