கடலூர்: சிதம்பரத்தில் ஒரு மாத காலத்துக்கு 144 தடை உத்தரவு நேற்று காலை அறிவிக்கப்பட்ட நிலையில், சுமார் 16மணி நேரத்தில் நேற்று இரவு 144 உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவிலை கைப்பற்றி தமிழக அறநிலைத்துறை முயற்சித்து வருகிறது. இதுமட்டுமின்றி, அங்கு அடிக்கடி தீட்சிதர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதலும் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அங்கு கனகசபை தரிசனம் செய்வதில் பெரும் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து, சிதம்பரம் கோவில் கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. இது தொடர்பாக இரு தரப்புக்கு இடையே தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், அங்குள்ள நிலைமை சரியாகும் வரை, சிதம்பரம் நகரில் 1 மாத காலத்துக்கு போராட்டங்கள் நடத்த 144 தடை உத்தரவை கோட்டாட்சியர் ரவி நேற்று (24.03.2022) காலை பிறப்பித்தார்.
இந்த நிலையில், நேற்று மாலை 144 உத்தவு வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நேற்று மாலை கோட்டாட்சியர் ரவி 144 தடை உத்தரவு விலக்கி கொள்ளப்படுவதாக அறிவித்துள்ளார்.
மேலும், சிதம்பரம் கோவில் கனகசபை விவகாரம், அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், தமிழக அரசு சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.