டெல்லி: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில்  கேரள மாநில அரசின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்து கண்டனம் தெரிவித்துள்ள உச்சநீதி மன்றம் கேரள அரசு  ஒத்துழைக்காவிட்டால் தமிழகம் நீதிமன்றத்தை நாடலாம் என கூறியுள்ளது.

100ஆண்டுகளை கடந்துள்ள முல்லை பெரியாறு அணையை உடைத்துவிட்டு புதிய அணை கட்ட வேண்டும் என கேரள மாநில அரசு முரண்டுபிடித்து வருகிறது. அணை உறுதியாக இருக்கிறது என்பது பல்வேறு ஆய்வுகள்  மூலம் தெரிய வந்துள்ளதால், தற்போது புதிய அணை தேவையில்லை, பழைய அணையையே பராமரித்து பயன்படுத்தலாம் என தமிழகஅரசு கூறி வருகிறது. இது தொடர்பாக இரு மாநிலங்களுக்கும் இடையே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ஏற்கனவே இதுதொடர்பான வழக்குகள் உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், கேரளாவைச் சேர்ந்த  பல தனிநபர்களும் பல்வேறு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்த மனுக்களை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், ஏ.எஸ்.ஒகா, சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. ஏற்கனவே உச்சநீதி மன்றம் அணையை தமிழகஅரசு பராமரிக்க அறிவுறுத்தி உள்ளது. ஆனால், அணை பராமரிப்புக்கு செல்லும் அதிகாரிகளை கேரள மாநில காவல்துறையினர் தடுத்து வருகின்றனர்.

இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் முறையிடப்பட்டது., முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பணிகளை மேற்கொள்ள கேரளா ஒத்துழைப்பு அளிப்பதில்லை என புகார் கூறப்பட்டது.

இதையடுத்து, கேரள அரசின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்த நீதிபதிகள்,  முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா இடையூறு செய்தால் உச்சநீதிமன்றத்தை தமிழகம் நாடலாம். இதற்காக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றால் கூட அதை செய்ய தயாராக இருக்கிறோம் என காட்டமாக கூறியதுடன்,

முல்லைப்பெரியாறு அணை பராமரிப்புக்கு ஒத்துழைக்காவிட்டால், கேரள தலைமைச் செயலருக்கு உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்றும் எச்சரித்தனர். மேலும்,  முல்லை பெரியாறு அணையின் மேற்பார்வைக்குழுவின் பரிந்துரைகளை கேரள அரசு செயல்படுத்தாமல் இருப்பது, நீதிமன்ற அவமதிப்பாகும்  என்றும் கண்டனம் தெரிவித்தனர்.