காரிமங்கலம்
அதிமுக வார்டு உறுப்பினர் மகன் அரசு அதிகாரியின் கன்னத்தில் அறைந்த நிகழ்வு கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காரிமங்கலம் பேரூராட்சி தர்மபுரி மாவட்டத்தில் உள்ளது. இங்கு ஏரிகள் மற்றும் புளிய மரங்களுக்கான ஏலம் நேற்று நடந்துள்ளது. ஏலதாரர்கள் வரத் தாமதம் ஆனதால் ஏலம் மதியம் 12.30 மணிக்குத் தொடங்கியது. இந்த ஏலத்தில் கலந்து கொண்ட பேரூராட்சி அதிமுக வார்டு உறுப்பினர் மகன் பாரதி என்பவர் டெபாசிட் காசோலை குறித்து கேள்வி எழுப்பி அதை வேறு பெயருக்கு மாற்றி கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
ஏலத்துக்குப் பொறுப்பு வகித்த பேரூராட்சி அலுவலக தலைமை எழுத்தர் சந்தோஷ் இவ்வாறு மாற்றா முடியாது என தெரிவித்துள்ளார். அதை பாரதி ஏற்க மறுத்து தகராற்றில் ஈடுபட்டு அதிகாரியுடன் தள்ளுமுள்ளு செய்துள்ளார். அதில் அதிகாரியின் கன்னத்தில் அதிமுக உறுப்பினர் மகன் பாரதி அறைந்துள்ளார். சந்தோஷ் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து செயல் அலுவலர் சேகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காரிமங்கலம் காவல் நிலைய அதிகாரிகள் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். ஒரு அரசு அதிகாரியை அவர் அலுவலகத்திலேயே அதிமுக பிரமுகர் மகன் கன்னத்தில் அறைந்தது இந்த பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.