கோவை: முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அவர்மீது வருமானத்துக்கு அதிக மாக 3,928 சதவீதம், அதாவது ரூ.51.09 கோடி சொத்து சேர்த்து உள்ளதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து,  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு உட்பட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்று வருகிறது.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி. வேலுமணி. இவர்மீது ஏராளமான குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.  தனது பதவிக் காலத்தில் டெண்டர் முறைகேடு உள்பட பல ஊழல் புகார்கள் கூறப்பட்டன. இதுகுறித்து திமுக அரசு பதவி ஏற்றதும், 2021ம் ஆண்டு ஆகஸ்டு மாதம்  எஸ்.பி. வேலுமணி வீடு உள்பட பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம், அவர் வருமானத்தை விட 3,928% கூடுதலாக அதாவது, ரூ.58.23 கோடிக்கு கூடுதலாக சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எஸ்.பி. வேலுமணியின் குடும்பத்தினர் உள்ளிட்ட 13 பேர் மீது கோவையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதன் பேரில் எஸ்.பி.வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன், அவரது மனைவி ஹேமலதா, கான்டிராக்டர் சந்திரசேகர், சந்திரபிரகாஷ், கிருஷ்ணவேனி, கார்த்தி, சுந்தர், விஷ்ணுவர்தன், சரவணக்குமார் ஆகிய 10 பேர் மீதும் மற்றும் ஸ்ரீமகா கணபதி ஜூவல்லர்ஸ், கன்ஸ்ட்ரோன்மேன் கூட்ஸ் நிறுவனம், ஆலம் கோல்டு டைமண்ட் நிறுவனம் ஆகிய 3 கம்பெனிகள் என 13 பேர் மீது கூட்டுச்சதி , ஊழல் தடுப்புச் சட்டம் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் கோவை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் நேற்று வழக்குப்பதிந்தனர்.

மேலும், முன்னாள் அமைச்சர் வேலுமணி 5 நாடுகளில் 32 நாட்கள் தங்கியதாகவும், அவரது குடும்பத்தினர் 9 நாடுகளுக்கு பயணம் செய்து 130 நாட்கள் தங்கியதாகவும், இதன்மூலம் அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாடுகளிலும் சொத்து குவித்திருக்கலாம் என  லஞ்சஒழிப்பு காவல்துறையின் முதல்தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து சுகுணாபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டுக்கு இன்று காலை 6 மணிக்கு டி.எஸ்.பி மதியழகன் தலைமையில் 5 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் குழுவினர் வந்தனர். அப்போது வீட்டில் எஸ்.பி.வேலுமணி, மனைவி , மகன் உள்ளிட்டோர் இருந்தனர். வீட்டில் இருந்தவர்களை ஓரிடத்தில் அமரச் சொல்லிவிட்டு போலீஸார் தங்களது சோதனையை தொடங்கி நடத்தினர்.

மேலும்,  எஸ்.பி. வேலுமணியின் உதவியாளர் சந்தோஷ் வீடு உள்ளிட்ட 41 இடங்களிலும், செனனையில் 8 இடங்கள், சேலத்தில் 4 இடங்களிலும், திருப்பத்தூரில் 2 இடங்களிலும், நாமக்கல் மாவட்டத்தில் 1 இடத்திலும், கிருஷ்ணகிரியில் 1 இடத்திலும் என 6 மாவட்டங்களில் 58 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. கோவையில் 41 இடங்கள், சென்னையில் 8 இடங்கள், சேலத்தில் 4 இடங்கள் ,திருப்பத்தூரில் 2 இடங்கள் ,நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரியில் தலா ஒரு இடம் , வெளி மாநிலத்தில் ஒரு இடம் என 58 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

கோவை, பாலக்காடு சாலை குனியமுத்தூர் அருகேயுள்ள சுகுணாபுரத்தைச் சேர்ந்தவர் எஸ்..பி.வேலுமணி. கடந்த 2016-21 அதிமுக ஆட்சி காலத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி வகித்தார். தற்போது முன்னாள் அமைச்சரான எஸ்.பி.வேலுமணி தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏவாக உள்ளார். அதிமுக கொறடாவாகவும் உள்ளார்.

எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் மீண்டும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்துவது குறித்து தகவல் அறிந்தவுடன் எஸ்.பி.வேலுமணி வீட்டு முன்பு அதிமுகவினர் திரண்டனர். திமுக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.