டெல்லி: உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு அரசு நிச்சயம் உதவும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
உக்ரைன் நாட்டில் சுமார் 20ஆயிரம் இந்திய மாணவர்கள், மருத்துவம் உள்பட பல்வேறு படிப்புகளில் இணைந்து படித்து வருகின்றனர். அங்கு ரஷ்யா தாக்குதல் நடத்தத் தொடங்கியதும், அவர்களை மீட்கும் பணியில் மத்தியஅரசு ஈடுபட்டது. இதையடுத்துஆபரேசன் கங்கா மூலம் சிறப்பு விமானங்களை அனுப்பி உக்ரைனில் சிக்கிய தமிழக மாணவர்கள் அண்டை நாடுகளின் எல்லைக்கு வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வந்தன. மத்திய அரசு உதவியுடன் தமிழகஅரசும் சிறப்பு குழு அமைத்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வந்தது.
உக்ரைனில் சிக்கி தவித்த தமிழகத்தை சேர்ந்த 1,860 மாணவ மாணவிகள் மீட்கப்பட்டுள்ளனர். இதுமட்டுமின்றி மற்ற மாநிலங்களைச் சேர்ந்த பல ஆயிரம் மாணவ மாணவிகளும் மீட்கப்பட்டு உள்ளனர்.
இதுதொடர்பா பாராளுமன்றத்தில் இன்று திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, “உக்ரைனிலிருந்து திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்களுக்காக மத்திய அரசு என்ன திட்டம் வைத்துள்ளது? ரஷ்யாவுடன் இந்திய அரசுக்கு இருக்கும் உறவைப் பயன்படுத்தி இந்த மாணவர்கள் ரஷ்யப் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில ஏற்பாடு செய்யப்படுமா?” என்று வினவினார்.
அதற்கு பதில் அளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான். உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் தங்கள் கல்வியை தொடர மத்திய அரசு நிச்சயம் உதவும் என்றும் அது தொடர்பாக ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.