சென்னை: கடந்த அதிமுக ஆட்சியின்போது மதுரை மத்திய சிறையில் ரூ.100 கோடி ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சர்ச்சை தொடர்பாக விசாரணை நடத்த உயர்நீதி மன்றம் அனுமதி அளித்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியின்போது மதுரை மத்திய சிறையில் நூறு கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், சிறைக்கைதிகள் உரிமை மைய இயக்குனருமான பி.புகழேந்தி கடந்த ஆண்டு (2021) நவம்பர் மாதம் 16ந்தேதி பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
அவரது மனுவில், கடந்த 2016 முதல் 2021 மார்ச் மாதம் வரை மதுரை மத்திய சிறையில் சிறைக்கைதிகளால் தயாரிக்கப்பட்ட பொருட்கள், அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டதாக போலி கணக்கு தயாரித்து ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், பேண்டேஜ் துணி, அலுவலக பயன்பாட்டிற்கான கவர்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்து அனுப்பியதாக சிறை ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், ஆனால் அத்தகைய பொருட்களைப் பெறவில்லை என்றோ, குறைவான அளவில் பெற்றதாகவோ அரசு அலுவலகங்கள் தெரிவித்துள்ளதாகவும், அதிகமாக உற்பத்தி செய்ததாகவும் , சிறைக்கைதிகளுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும் போலி கணக்கு காண்பிக்கப்பட்டதாகவும், இதில் அப்போதைய சிறைத்துறை கண்காணிப்பாளர், மற்றும் டிஐஜிகளுக்கு தொடர்பு உள்ளதாகவும் , இதில் சுமார் 100 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளது என்றும், இந்த ஊழல் தொடர்பாக உள்துறைச்செயலாளர், சிறைத்துறை டிஜிபிக்கு புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை என்பதால், இது குறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து விசாரித்த உயர்நீதிமன்றம், மதுரை மத்திய சிறையில் ரூ.100 கோடி ஊழல் குறித்து விசாரணை நடத்தலாம் என்று உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை புகார் மனு அளிக்கவும் அனுமதி வழங்கி உள்ளது.
மதுரை சிறையில் சிறை கண்காணிப்பாளர், டிஐஜிக்கள் ஆதரவுடன் ரூ.100 கோடி ஊழல்! உயர்நீதிமன்றத்தில் வழக்கு