சென்னை:  உடன்குடி அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கான பணிகளை தொடங்குவது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் 660 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அனல்மின் நிலைய அலகுகள் அமைப்பதற்காக சுற்றுச்சூழல் அனுமதி கடந்த 2020ம் ஆண்டு வழங்கப்பட்டது. இதையடுத்து, அனல்மின் நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. அங்கு அமைக்கப்பட்டு வரும் இரண்டு  அனல் மின் நிலையங்களும் 2023ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வரும் என கூறப்பட்டது. ஆனால், இடையில் அனல்மின் நிலையத்திற்கான பணிகள் மந்த கதியில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், தற்போது உடன்குடி அனல்மின் நிலைய விரிவாக்க திட்ட பணிகளை தொடங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2 மற்றும் 3-ஆம் நிலை ( 4*660) க்கான பணிகளுக்காக நிலத்தை கையகப்படுத்த அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

உடன்குடியில் அனல் மின் நிலையங்களுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த அனல் மின் நிலையங்களின் கட்டுமானப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டால் தமிழக அரசின் நிதிநிலைமை மேலும் மோசமடையக் கூடும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்ட பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.

கிராமங்களில் கையகப்படுத்தும் நிலத்திற்கு இழப்பீடு வழங்க ரூ.68.58 கோடிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளிலோ, பாதுகாப்பு ஏற்படுத்தும் பகுதிகளிலோ நிலம் கையகப்படுத்தக்கூடாது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், நிலம் கையகப்படுத்தும் பணிக்காக அதனை கண்காணிக்க 78 பேரை நியமித்து மின்சார வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.