சென்னை: தமிழ்நாட்டில் பிப்ரவரி-1 ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், இதற்கான முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவியதைத் தொடர்ந்து, தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, பள்ளிகள் மூடப்பட்ட ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கும் வரும் 31ந்தேதியுடன் முடிவுக்கு வருகிறது.
இதையடுத்து, அடுத்தகட்ட ஊரடங்கு மற்றும் தளர்வுகள் வழங்குவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை உயர் அதிகாரிகரிகளுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இதில் சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள், மற்றும் மருத்துவ வல்லுநர்களும் பங்கேற்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பிப்ரவரி-1 ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது தொடர்பான அறிவிப்பு இன்று மாலை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழ்நாட்டில் பள்ளிகளை திறக்க முதல்வரிடம் பரிந்துரைக்கப்பட்டு இருப்பதாக கூறிய நிலையில், பள்ளிகள் திறக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக நம்பப்படுகிறது.