சென்னை
சென்னையில் நாளை இரவு 12 முதல் காலை 5 மணி வரை வாகன போக்குவரத்துக்கு காவல்துறை தடை விதித்துள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னை காவல்துறை ஏற்கனவே கட்டுப்பாடு விதிமுறைகளை அறிவித்திருந்தது. அதில் முக்கியமாகப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்குப் பொதுமக்கள் வெளியிடங்களில் ஒன்று கூடக்கூடாது என்றும், கடற்கரையை ஒட்டிய சாலைகளான காமராஜர் சாலை, ஆர்.கே.சாலை, ராஜாஜி சாலை, அண்ணாசாலை, ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட சாலைகளில் வாகனங்களில் வானங்களை நிறுத்தி புத்தாண்டு கொண்டாடக்கூடாது என்றும் சென்னை காவல்துறை அறிக்கை வெளியிட்டிருந்தது.
தவிர சென்னையில் உள்ள ரிசார்ட்டுகள், பண்ணை வீடுகள், மாநாட்டு அரங்குகள், கிளப்புகள் போன்றவற்றில் புத்தாண்டு வர்த்தக நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதிய கட்டுப்பாடு ஒன்றைச் சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.
அதன்படி சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை இரவு 12 மணி முதல் ஒன்றாம் தேதி காலை 5 மணி வரை, அத்தியாவசிய வாகன போக்குவரத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் மற்ற வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது என்று சென்னை காவல்துறை திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஆகவே பொதுமக்கள் அனைவரும் நாளை இரவு 12 மணிக்கு முன்பாகவே தங்கள் பயணங்களை முடித்துக்கொள்ளுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.