தகமண்டலம்

நீலகிரி மாவட்டத்தில் உறைபனி காலம் தொடங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்துள்ளது.

வழக்கமாக நீலகிரி மாவட்டத்தில் வழக்கமாக நவம்பர் மாத தொடக்கத்தில் உறைபனி தொடங்கி, மார்ச் முதல் வாரம் வரை நீடிக்கும். நடப்பாண்டில் மழை மற்றும் மேகமூட்டம் காரணமாக உறைபனிப் பொழிவு தள்ளிப்போனது.   கடந்த சில நாட்களாக உறைபனியின் தாக்கம் அதிகரித்து வருகிறது.  குளிர்காலம் தொடங்கிய முதல் நாளே வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸாக பதிவானது.

குறிப்பாக தலைகுந்தா, அவலாஞ்சி, முக்கூர்த்தி, கேத்தி பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் வெப்பநிலை குறைந்தது.  உதகை தாவரவியல் பூங்கா மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று அதிகாலை வெட்பநிலை 2 டிகிரி செல்சியஸாக பதிவானது.  மேலும் உதகை குதிரைப் பந்தய மைதானம், அரசு தாவரவியல் பூங்கா, தலைகுந்தா, கேத்தி, லவ்டேல் ஆகிய பகுதிகளில் கடுமையான உறைபனி நிலவியது. இதனால் புல்வெளிகள் அனைத்தும் உறைபனியால் வெள்ளைக் கம்பளம் விரித்தாற்போல் காட்சி அளித்தன.

இங்குள்ள தேயிலைச் செடிகள், மலைக் காய்கறி பயிர்கள், தாவரங்கள் என அனைத்தும் வெண் முத்துக்களாகக் காட்சியளித்தன.  தவிர கடும் பனிப்பொழிவால் வாகனங்களில் டீசல் உறைவதால் காலையில் வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர். பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் பகல் நேரத்திலேயே சாலை ஓரங்களில் தீ மூட்டிக் குளிர்காயும் சூழல் ஏற்பட்டுள்ளது.

காலை வேளையில் கை கால்கள் விரைத்துப் போகும் நிலை ஏற்பட்டதால், தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.  ஓரளவு வெயில் இருந்த போதும் கடுமையான குளிர் வாட்டியதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.