சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், திமுக சார்பில் போட்டியிட வேட்புமனு அளித்துள்ளவர்களிடம், நாளை நேர்காணல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட 15 மாநகராட்சிகள், 12 நகராட்சிகள், 528 பேரூராட்சிகளில் தான் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த பகுதிகளில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளதுடன், ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சி, உதவி தேர்தல் அதிகாரிகள் பேரூராட்சிகளிலும் நியமிக்கப்பட்டுள்ளனர். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்ட பிறகு, தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெறலாம் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.
இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் விருப்பமனு அளித்தவர்களிடம் 29 ஆம் தேதி முதல் நேர்காணல் நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. திமுக மாவட்டச்செயலாளர்களே, அவர்களது மாவட்டங்களில் நேர்காணலை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.