கோவை: என்னை ஒரேஒருநாள் முதல்வராக்குங்கள் என கோவையில் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய போராட்டத்தில் பேசிய சீமான் தெரி வித்து உள்ளார். அர்ஜூன் படத்தில் வருவதுபோல் ஒரே ஒருநாள் முதல்வராக்குங்கள்… எல்லாத்தையும் செய்துட்டு விலகிக்குறேன்” என்று கூறினார்.
20ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் சிறைக்கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி போராட்டத்தின் போது, திமுகவினர் புகுந்து தாக்கல் நடத்தினர். இது கடுமையான விமர்சனங்களை எழுப்பியது.
இதையடுத்து, தனது போராட்டத்தில் வந்து திமுகவினர் தாக்குதல் நடத்துங்கள் பார்ப்போம் என்று சவால் விட்ட சீமான் நேற்று கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். இதையடுத்து, அங்கு பலத்த போலீஸ் காவல் போடப்பட்டது. அங்கு சீமானுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காவல் துறையினர் திமுகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லுமாறு கூறினார். இதனை திமுகவினர் ஏற்க மறுத்ததால், காவல் துறையினர் கைது செய்ய முயன்றனர். அப்போது திமுகவினர் சீமானுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். அப்போது திமுகவினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டம் நடத்திய திமுகவினர் 15 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய சீமான், ”சிறையில் இருப்பவர்களை விடுவிப்பது குறித்து அரசு குழு அமைத்துள்ளது. வீதியில் நின்று மக்கள் போராடுவது தான் கருத்து. புழு கூட நகரும். அரசு அமைக்கும் குழுக்கள் எதுவும் செய்யாது என்று விமர்சித்தவர், என்னை பார்த்து பேசுங்க என காவல்துறையினர் சொல்கின்றனர். மொழி வழியே தான் தேசிய இனங்கள் பிரிக்கப்பட்டு இருக்கின்றது. சாதி வாரியாக, மதம் வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படவில்லை என்றவர், மானமுள்ள தமிழன் திமுக ஒட்டு போட மாட்டான் என பழனி பாபா கூறியுள்ளார். ஆனால் போட்டு இருக்கின்றான். அப்படியெனில் மானம் இல்லை என அர்த்தம்.
மதத்தை பார்க்காமல் மனிதம் பார்க்கவேண்டும். எதிர்கட்சியாக இருந்த போது 7 தமிழர் விடுதலை பேசுகின்றனர். இப்போது திமுகவினர் பேச மாட்டார்கள். இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க வாய்ப்பு தாருங்கள் என கேட்டதால் திமுகவிற்கு இஸ்லாமியர்கள் வாக்கு செலுத்தினர். மனிதநேய அடிப்படையில், கருணை அடிப்படையில் இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க வேண்டும்.
மதத்தை காரணம் காட்டி சிறையில் வாடும் இஸ்லாமியர்களை விடுவிக்காமல் இருப்பது ஏற்க முடியாது என்றவர், ராஜீவ் கொலையாளிகளை யும் விடுதலை செய்ய வேண்டும், இதை தமிழக அரசு புரிந்து கொண்டு செயல்படனும் இதற்காக தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். எனக்கு வேறு வேலையும் இல்லை.
எங்களால் போராடத்தான் முடியும். சிறைக்கதவை திறந்து அவர்களை விடு அல்லது எங்களை உள்ளேபோடு் என்று சொல்வோம். விடுதலை செய்யும் அதிகாரம் எங்களுக்கு இல்லை. உங்களுக்கு இருக்கிறது. ஆனால் ஸ்டாலின் நீங்க பயப்படுகிறீர்கள். எதுக்கு பயப்படுகிறீர்கள். பா.ஜ.கவினர் கத்துவாங்க. அவங்களை நாங்க பார்த்துக்கிறோம். முதலமைச்சர் ஸ்டாலின் விடுதலை செய்வீர்கள் என்ற நம்பிக்கையில்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தமிழக முதல்வர் மதத்தை பார்க்காமல் மனிதத்தை பார்த்து 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடிக் கொண்டிருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
அர்ஜூன் படத்தில் வருவதைப்போல என்னை ஒரே ஒரு நாள் முதல்வராக்குங்கள். எல்லாத்தையும் செய்து விட்டு விலகிக்குறேன். முதல்வர் துணிந்து முடிவு எடுக்கவேண்டும். இஸ்லாமியர் என்பதை காரணம் காட்டி விடுதலை செய்யாமல் இருப்பதை ஏற்க முடியாது. அரசு அமைத்த குழு நியாயமான முடிவை முன் வைக்கும் என எதிர்பார்க்கின்றேன். கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராடுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து போராடுவதில் எனக்கு பெருமைதான். அந்த அளவிற்கு பெரிய ஆளாகி இருக்கின்றோம். அரசியல்ல இதெல்லாம் சாதாரணம். தரக்குறைவு பேச்சு என்பதை திமுக பேசக்கூடாது. அவர்கள் தரக்குறைவாக தான் பேசுவாங்க. சின்னம்மாவை அம்மாவாக்க போகின்றேன் என திமுகவினர் பேசுகின்றனர். இது தவறானது. அரசுக்கு எதிராக பேசக்கூடாது என்பது நல்ல ஜனநாயகம் அல்ல. பாஜகவே இதைத்தான் செய்கின்றது. அதையே திமுகவும் செய்கின்றது. அரசுக்கு எதிராக பேச வேண்டும் என்பது மனநோய் அல்ல. அரசு சரியாக இருந்தால் பேசப்போவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.