டில்லி
டில்லியில் 100% பேருக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
நாடெங்கும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக்கப்பட்டன. அவ்வகையில் டில்லியில் அந்த பணி தீவிரமாக நடந்து வருகிறது. டில்லியில் தற்போது கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள தகுதி உடையோர் அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதை டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால் அறிக்கையில், “
”கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றிபெற தடுப்பூசி ஒன்றே தீர்வு என்பதால் அதனை டில்லி அரசு முனைப்புடன் கையாண்டு வருகிறது. கொரோனா பாதிப்பைக் கண்டறிய நாள் ஒன்றுக்கு 3 லட்சம் பரிசோதனைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. தற்போது வீடு, வீடாகச் சென்று பரிசோதனை நடத்தவும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
அதாவது தினசரி 1 லட்சம் பேர் பாதிக்கப்பட்டாலும்கூட அவர்களுக்குச் சிகிச்சை அளிக்க டில்லி அரசு தயார் நிலையில் உள்ளது. லேசாக கொரோனா அறிகுறி உள்ளவர்கள் வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்களுக்குத் தொற்று உறுதியானால் உடனே அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். அரசிடம் 2 மாதங்களுக்குத் தேவையான மருந்து மற்றும் மருத்துவ பொருட்கள் அரசிடம் தயாராக உள்ளது
இதுவரை டில்லியில் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் தகுதி உள்ள 148.33 லட்சம் பேருக்கும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் 100 சதவீதம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த 100 சதவீத தடுப்பூசி என்ற இலக்கை அடைய உறுதுணையாக இருந்த மருத்துவர், செவிலியர்கள் ஆசிரியர்களுக்கு நன்றி ”
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.