டில்லி

மிக்ரான் பரவல் நாடெங்கும் அதிக அளவில் பரவுவதையொட்டி இன்று பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.

தடுப்பூசி மூலம் கொரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது.  ஆனால் அதன் உருமாறிய வைரஸான ஒமிக்ரான் பரவல் உலக நாடுகளைக் கடுமையாக அச்சுறுத்தி வருகிறது.   வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் மூலம் இந்தியாவிலும் ஒமிக்ரான் பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.  மக்களிடையே இது கடும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்தியாவில் சுமார் 226 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை 90 பேர் குணம் அடைந்துள்ளனர். ஒமிக்ரான் பரவலால் மகாராஷ்டிராவில் 54, டில்லியில் 54 தெலுங்கானாவில் 20 கர்நாடகா 19,  ராஜஸ்தான் 18, கேரளா 15, குஜராத் 14,  காஷ்மீர் – 3, ஒடிசா ஆந்திரா மற்றும் உபி தலா 2, தமிழகம், சண்டிகர், லடாக் மற்றும்  மேற்கு வங்கத்தில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் இன்று பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.  இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒமிக்ரானை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், மாநிலங்களில் எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள், கொரோனா தடுப்பூசி, இரவு நேரக் கட்டுப்பாடு குறித்து விவாதிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

பிரதமர் மோடியின் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத்துறை உள்ளிட்ட முக்கிய மத்திய அமைச்சர்கள், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.  பிரதமர் அலுவலகம் இந்த கூட்டம் குறித்த அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளது.