டெல்லி: லக்கிம்பூர் வன்முறை குறித்து எதிர்க்கட்சியினர் மக்களவை, மாநிலங்களவையில் ஏற்படுத்திய அமளியால் பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
விவசாயிகள் போராட்டத்தின்போது, உ.பி. மாநிலம் லக்கிம்பூர் பகுதியில் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்த வன்முறை தொடர்பாக உச்சநீதிமன்றம் அமைத்த விசாரணை குழு, இது திட்டமிட்ட செயல் என்று கூறி உள்ளது.
இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து விவாதிக்க கோரி மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இன்று காலை மக்களவை தொடங்கியதில் இருந்து லக்கிம்பூர் சம்பவம் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சியினர் பதாகைகளுடன் கோஷங்களை எழுப்பினர். எதிர்க்கட்சியினரின் அமளி தொடர்ந்ததால், மக்களவையை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.
அதுபோல 12 எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்டு உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவையும் முதலில் 12மணி வரை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், அவை மீண்டும் கூடியதும் அமளி தொடர்ந்ததால் பகல் 2மணி வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.