சென்னை: மதுரை உள்பட தென்மாவட்டங்களில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று முதல் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி ஏற்றதைத் தொடர்ந்து, அவ்வப்போது மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதுபோல பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு, புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது குறித்து பேசி வருகிறார்.
இத்ந நிலையில், இன்றுமுதல் 4 நாள் பயணமாக இன்று முதல் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்படி தூத்துக்குடி, நெல்லை, மதுரை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்கிறார்.
இன்று (13ஆம் தேதி) காலை 11 மணிக்கு விமானம் மூலம் தூத்துக்குடி வருகிறார். அவருக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் மாவட்ட நிர்வாகத்தினர் வரவேற்பு அளிக்கின்றனர்.
பகல் 12:30 மணிக்கு தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள பாரதி மணிமண்டபம் மற்றும் பாரதி இல்லத்திற்கு சென்று அவரது உருவ சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்துகிறார்.
பிற்பகல் தூத்துக்குடி வரும் கவர்னர், அங்கு கலெக்டர், எஸ். பி.,மற்றும் முன்னாள் ராணுவத்தினருடன் கலந்துரையாடுகிறார். மாலையில் தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்தை சுற்றிப் பார்க்கிறார். இரவு திருச்செந்தூர் சுற்றுலா மாளிகையில் தங்குகிறார்.
நாளை (14ஆம் தேதி) காலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் மேற்கொள்கிறார். பின்னர் அங்கிருந்து திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ விண்வெளி மையத்திற்கு செல்கிறார்.
14ஆம் தேதி பகலில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு வரும் கவர்னர் அங்கு துணைவேந்தர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர், என்.சி.சி., மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்.
இரவில் திருநெல்வேலி சுற்றுலா மாளிகையில் தங்குகிறார்.
நாளை மறுதினம் (15ஆம் தேதி) காலையில் 7:30 மணிக்கு நெல்லையப்பர் கோவிலில் சுவாமி தரிசனம் மேற்கொள்கிறார் பின்னர் 10:30 மணிக்கு திருநெல்வேலி அபிசேகப்பட்டியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை வளாகத்தில் நடக்கும் 28வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். விழாவில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, திருவனந்தபுரம் சி.எஸ்.ஐ.ஆர். இயக்குநர் அ.அஜயகோஷ், துணைவேந்தர் பிச்சுமணி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
மதிய உணவுக்குப் பிறகு கார் மூலம் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்திற்கு செல்கிறார்.
15ம் தேதி மாலை 5.30 க்கு மதுரை காமராஜர் பல்கலையில் துணைவேந்தர், கல்லூரி முதல்வர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். இரவில் மதுரையில் தங்கும் கவர்னர்
வரும் 16ஆம் தேதி காலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் மேற்கொள்கிறார். 16ம் தேதி காலை 10.30 மணிக்கு மதுரை காமராஜர் பல்கலை வளாகத்தில் நடக்கும் கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலையின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். பகலில் சிண்டிகேட் உறுப்பினர் உடன் கலந்துரையாடுகிறார்.