மதுரை
கொரோனா தடுப்பூசி போடாதோர் பொது இடங்களுக்குச் செல்ல மதுரை மாவட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாடெங்கும் கொரோனா பாதிப்பு அதிகமானதால் ஊரடங்கு அமலானது. பாதிப்பு குறைந்த பிறகு சிறிது சிறிதாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி முதல் கொரோனாவை கட்டுப்படுத்த நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின. முதலில் முன்களப் பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், பிறகு 60 வயதுக்கு மேற்பட்டோர் எனத் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின.
தற்போது அது மேலும் விரிவாக்கப்பட்டு 18 வயது நிறைவடைந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட அரசு அனுமதி அளித்துள்ளது. நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இன்னும் மக்களில் சிலர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் உள்ளனர். அதையொட்டி இந்த பணிகள் மேலும் தீவிரமாக்கப்பட்டுள்ளன.
அதன்படி மதுரை மாவட்ட ஆட்சியர் மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடாதோர் பொது இடங்களுக்குச் செல்ல தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவின் படி ரேஷன் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், திரையரங்குகள், சூப்பர் மார்க்கெட்டுகள், கடைவீதிகள், துணிக்கடைகள், வங்கிகள் உள்ளிட்ட 18 பொது இடங்களுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.