சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னைப் பெருநகர வெள்ளப் பெருக்கைத் தணித்தல் மற்றும் நிர்வகித்தல் குழுவின் ஆலோசனை கூட்டம் தலைமைச்செயலகத்தில் இன்று முற்பகல் நடைபெற்றது. இதில், ‘கடந்த முறை ஏற்பட்ட பாதிப்புகளை அடுத்த முறை நடக்காமல் தமிழ்நாடு தடுத்து விட்டது என்ற பெயரை நாம் எடுக்க வேண்டும்’ என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
பருவமழை காலத்தில் பெய்யும் தொடர் மழையால் தலைநகர் சென்னை கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்குவதுடன் வீடுகளுக்குள்ளும் புகுந்து பெரும் சேதத்தையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கிறது. இதை தடுக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் 18 பேர் கொண்ட சென்னைப் பெருநகர வெள்ளப் பெருக்கைத் தணித்தல் மற்றும் நிர்வகித்தல் குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்த குழுவின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சென்னையில் மழை நீர் தேங்குவதை எப்படி தடுக்கலாம் என்று ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து பேசிய முதல்வர், ‘கடந்த முறை ஏற்பட்ட பாதிப்புகளை அடுத்த முறை நடக்காமல் தமிழ்நாடு தடுத்து விட்டது என்ற பெயரை நாம் எடுக்க வேண்டும்’ என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.