டில்லி

புதிய புயல் ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்கள் இடையே கரையைக்கடக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் பிரதமர் மோடி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.

வானிலை ஆய்வு மையம் வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாறி ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்கள் இடையே டிசம்பர் 4 ஆம் தேதி கரையைக் கடக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.  இதையொட்டி ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன.

ஒடிசா அரசு 13 மாவட்ட ஆட்சியர்களைத் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களைப் பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.   மேலும் ஆந்திர மாநிலத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.   டில்லியில் பிரதமர் மோடி இந்த புயல் எச்சரிக்கை குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை இயக்குநர், வானிலை ஆய்வு மைய இயக்குநர், உள்துறை அமைச்சக அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  அவர்கள் புயல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பிரதமருக்கு விளக்கம் அளித்துள்ளனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடி அவர்களிடம் கேட்டறிந்துள்ளார்.