அரியலூர்: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரியலூர் அரசு பள்ளி தமிழ் ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார்.
தமிழ்நாட்டில் பெண்கள், மாணவிகள், சிறுமிகள் மீதான பாலியல் புகார்கள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே மாணவிகளிடம் பாலியல் சேட்டை செய்ததாக பல ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அரியலூர் அரசு பள்ளி மாணவிகளிடம் சேட்டை செய்த தமிழ் ஆசிரியர் ஒருவரும் கைது செய்யப்பட்டு உள்ளார்.
அரியலூர் மாவட்டம் காட்டுப்பிரிங்கியம் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருபவர் 35 வயதுடைய அருட்செல்வன். இவர் அங்கு படிக்கு 8ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, அந்த மாணவி, பள்ளி தலைமையாசிரியையிடம் புகார் தெரிவித்தார். ஆனால், தலைமை ஆசிரியை, இதை பெரிதுபடுத்த வேண்டாம் என மாணவியை சமாதானப்படுத்தி அனுப்பியதாக கூறப்படுகிறது.
ஆனால், அந்த மாணவி, தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து, மாணவியின் பெற்றோர் மற்றும் ஊர் மக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். இதையடுத்து அங்கு வந்த அரியலூர் டிஎஸ்பி மதன், ஆசிரியர் அருள்செல்வனை போக்சோ சட்டத்தின்படி கைது செய்தார். மேலும், மாணவி கொடுத்த புகாரை மறைக்க முயன்ற பள்ளி தலைமை ஆசிரியை ராஜேஸ்வரியையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.