டெல்லி: லடாக் கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் ஹவில்தார் பழனிக்கு வீர் சக்ரா விருதை குடியரசு தலைவர் வழங்கினார். இந்த விருதை பழனியின் மனைவி வானதிதேவி பெற்றுக்கொண்டார்.
இதையொட்டி, கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய – சீன வீரர்கள் இடையே கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி நடந்த மோதலில் இந்திய ராணுவத்தின் கர்னல் சந்தோஷ் பாபு, தமிழகத்தைச் சேர்ந்த ஹவில்தார் பழனி உள்ளிட்ட ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்ததாக அதிகாரபூர்வமாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த மோதல் சம்பவத்தில் சீன ராணுவ வீரர்கள் 45 பேர் வரை இறந்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகின.
இந்த மோதலில் வீர மரணம் அடைந்த வீரர்களை இந்திய அரசு கவுரவித்து வருகிறது. அதன்படி, கர்னல் சந்தோஷ் பாபுவுக்கு மகாவீர் சக்ரா விருத வழங்கப்பட்டது. அதையடுத்து, நாட்டுக்காக வீர மரணம் அடைந்த தமிழக வீரர், ஹவில்தார் பழனிக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வீர் சக்ரா விருதை வழங்கினார். இதை, பழனியின் மனைவி வானதிதேவி பெற்றுக் கொண்டார்.
ராணுவத்தில் ஹவில்தாரராக பணியாற்றி வந்தவர் பழனி. இவருக்கு வானதிதேவி (35) என்ற மனைவியும், பிரசன்னா (10) என்ற மகனும், திவ்யா (8) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், கடுக்கலூர் கிராமத்தில் வசித்து வருகின்றனர். ஹவில்தார் சீனாவுடன் கடந்த ஆண்டு லடாக் எல்லைப்பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நடந்த மோதலில் வீர மரணம் அடைந்தார். அவருக்கு வீர் சக்ரா விருது அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி, இன்று குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பழனிக்கு வீர் சக்ரா விருது அளிக்கப்பட்டது.
வீரமரணம் அடைந்த ஹவில்தார் பழனிச்சாமியின் மனைவிக்கு ஆசிரியை வேலையும், அவரது குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணமும், அப்போது ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
வீரமரணம் அடைந்த பழனியின் மனைவிக்கு ஆசிரியை பணி… பணி ஆணை வழங்கினார் எடப்பாடி…