சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி தமிழகத்தில் மீண்டும் மேல்சபை கொண்டு வருவதற்கான நடவடிக்கைளில் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அடுத்த சட்டசபை கூட்டத்தொடரில் அதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.
தமிழக சட்டமன்ற மேலவை 1986-ம் ஆண்டு வரை இருந்து வந்தது. இது தேவையற்ற செலவு என்றும், கோடிக்கணக்கான ரூபாய் வீணாவதாகவும், ஆளுங்கட்சியினர் ஆதரவாளர்களுக்காகவே மேலவை அமைந்துள்ளதும் என்றும் மறைந்த அதிமுக தலைவர் எம்.ஜி.ஆரின் ஆட்சியின்போது 1986ம் மேலவை ஆண்டு கலைக்கப்பட்டது. பின்னர் 1989ம் ஆண்டு மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தபின் மீண்டும் மேலவையைக் கொண்டு வருவதற்கான முயற்சியில் அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி முயற்சி மேற்கொண்டார். அவருக்கு துணையாக அப்போதைய பிரதமர் வி.பி.சிங்கும் உதவினார். ஆனால், நிறைவேறாமல் போனது. இதையடுத்து மறைந்த ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும், மீண்டும் மேலவை ரத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் 1996ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் மேலவை அமைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அது நிறைவேறவில்லை. இதையடுத்து, தற்போது 10ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மீண்டும் சட்டமன்ற மேலவையை கொண்டு வருவதற்கான முயற்சிகளை செய்து வருகிறது.
ஏற்கனவே திமுக தேர்தல் அறிக்கையில், அரசியல் அறிஞர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழிலாளர்களின் பிரதிநிதிகள், சமூக சேவகர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஆகியோர் இடம்பெற்று அரிய ஆலோசனை கூறத்தக்க வகையில் தமிழகத்தில் மீண்டும் சட்டமன்ற மேல்-சபையை விரைவில் கொண்டுவர உரிய அரசியல் சட்டத்திருத்தம் செய்ய வலியுறுத்துவோம் என்று கூறியிருந்தது. அதை நிறைவேற்றும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உயர்அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதுதொடர்பாக கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, அரசின் கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டிருந்த நிலையில், அடுத்து தொடங்க இருக்கும் கூட்டத்தொடரின்போது சட்டமன்ற மேலவைக்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் மீண்டும் மேல்-சபையை கொண்டு வரவேண்டும் என்றால் சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அது நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்ட மேலவை திட்டத்தை கைவிடுங்கள்! முதல்வர் ஸ்டாலினுக்க கமல்ஹாசன் கோரிக்கை