மேட்டூர்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 105 அடியை தாண்டியுள்ளது.

தென்மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. மேலும், கர்நாடக மாநிலம் குடகு மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணை நிரப்பி உள்ளது. இதனால் அங்கு வரும் தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒகேனக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது  நேற்று முன்தினம் ஒகேனக்கல்லில் விநாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 40 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.

ஒகேனக்கல்லில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 27 ஆயிரத்து 251 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 37 ஆயிரத்து 162 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து மிக குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று 102.79 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் 2 அடிக்கு மேல் உயர்ந்து 105.14 அடியானது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் 100 கன அடி தண்ணீரும், கால்வாயில் 300 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.