டெல்லி: என்னை வாழ வைக்கும் தமிழ் மக்களான தெய்வங்களுக்கு நன்றி. இந்த விருதை இயக்குனர் பாலச்சந்தருக்கு காணிக்கையாக்குகிறேன் என இன்று டெல்லியில் தாதா சாஹேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்த நெகிழ்ச்சியுடன் உரையாற்றினார்.
67வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா தலைநகர் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில், 45 ஆண்டுகளாக திரைத்துறையில் பணியாற்றி வரும் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தாதா சாஹேப் பால்கே விருதை குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு வழங்கி கவுரவித்தார்.
விருது பெற்ற பிறகு நடிகர் ரஜினிகாந்த் மேடையில் சிறிது நேரம் உரையாற்றினார். அப்போது, திரைத்துறையில் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த விருதை வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி. இந்த விருதை எனது குருவும், ஆலோகருமான கே. பாலச்சந்தருக்கு காணிக்கை யாக்குகிறேன். இந்த தருணத்தில் அவரை நினைவுகூற கடமைப்பட்டிருக்கிறேன்.
எனது சகோதரரும், தந்தையை போன்றவருமான சத்யநாராயண ராவ், ஆன்மீகம் உள்ளிட்டவற்றை கற்றுக்கொடுத்தார். என்னை இந்த துறைக்கு கொண்டு வந்த சக நண்பனான பேருந்து நடத்துனர் ராஜ்பகதூருக்கு நன்றியை தெரிவிக்கிறேன், அவர்தான் என்னை ஊக்குவித்தார். அனைத்தையும் தாண்டி என்னை வாழ வைத்த என் தமிழ் மக்களுக்கு நன்றியை உரித்தாக்குகிறேன் என்றார்.
தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் ரசிகர்கள், பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் தமிழ் மக்களான தெய்வங்களுக்கு நன்றி, ஜெய் ஹிந்த், எனக் கூறி உரையை முடித்தார்.
இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்தின் குடும்பத்தினரான லதா ரஜினிகாந்த், நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, டெல்லிக்கு புறப்படும் முன்பு தனது போயஸ் கார்டர்ன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி காந்த், தாதா சாகேப் பால்கே விருது எனக்குக் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. இந்த நேரத்தில் கே.பாலசந்தர் சார் இல்லையே என்று வருத்தமாக உள்ளது. இந்த விருதை நான் எதிர்பார்க்கவே இல்லை என்றார்.
மத்திய அரசால் இந்திய திரையுலக பிரபலங்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான, தாதா சாகேப் பால்கே 2019ம் ஆண்டுக்கான விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படுகிறது. ஏற்கனவே இந்த விருதை லதா மங்கேஷ்கர், அமிதாப் பச்சன், சத்யஜித் ரே, ஷியாம் பெனகல், நடிகர் சிவாஜி கணேசன், இயக்குநர் கே.பாலசந்தர் உள்ளிட்ட பலருக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்துக்கு தாதா சாஹேப் பால்கே விருது! துணைகுடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு வழங்கி கவுரவிப்பு