சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் ஊழல் செய்தாக முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை ஏற்கனவே ரெய்டு நடத்திய நிலையில், இன்று   சென்னை ஆலந்தூரில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அலுவலகத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆஜராகியுள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பதவி ஏற்றதும், ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு வந்த  முன்னாள் அமைச்சர்கள், அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையைக்கொண்டு சோதனை நடத்தி வருகிறது.  போலீஸ் அதிகாரி கந்தசாமி லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டு. அவரது  லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன்படி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ் பி வேலுமணி, கே சி வீரமணி, எம் ஆர் விஜயபாஸ்கர்,  முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சிவிஜயபாஸ்கர் உள்ளிட்ட நான்கு முக்கிய அமைச்சர்களின் வீடுகள் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.

முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர், அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கோடிக்கணக்கான ரூபாயை ஊழல் செய்ததாகவும் ,ஜிபிஎஸ், வேகக்கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்ட உதிரிபாகங்கள் வாங்குவதற்காக விடப்பட்ட டெண்டரில் முறைகேடு செய்வதாகவும் குற்றம் சுமத்தப்பட்டு, அவருக்கு  சொந்தமான வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் செப்டம்பர்  22ஆம் தேதி  லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர்.  அப்போது,  ரூபாய் 25 லட்சத்து 56 ஆயிரம் மற்றும் ஏராளமான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அவரை விசாரணைக்கு ஆஜராக லஞ்ச ஒழிப்பு காவல்துறை சம்மன் அனுப்பியது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வந்தால், அவர் ஆஜராக காலஅவகாசம் கோரியிருந்தார். அதையடுத்து, அவர் அக்டோபர் 25-ஆம் தேதி  ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

இதையடுத்து,  சென்னை ஆலந்தூரில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆஜராகியுள்ளார்.  எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை  நடத்தி வருகின்றனர்.