சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில்,  மாநிலம் முழுவதும் இன்று 6வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே ஞாயிற்றுக்கிழமை களில்  5  மெகா முகாம்கள்  நடத்தப்பட்டு பல லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், இன்று 6வது தடுப்பூசி மெகா முகாம், முதன்முறையாக, மது குடிப்போர் மற்றும் அசைவம் சாப்பிடுவோருக்காக  சனிக்கிழமை (23ந்தேதி) நடத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் 1600 முகாம் உள்பட மாநிலம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இந்த முகாம்கள் நடைபெறுகிறது. அதனால் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களும், இரண்டாவது டோஸ் தேதி வந்தவர்களும் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள தமிழக மருத்துவத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி எடுத்துகொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெற்ற முதல் மெகா தடுப்பூசி முகாம் 40,000 மையங்களில் நடைபெற்றது. அதில் 28 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இரண்டாவது முகாமில் 16.43 லட்சம் பேருக்கும், மூன்றாவது முகாமில் 24 லட்சம் பேருக்கும், 4வது முகாமில் 17.19 லட்சம் பேருக்கும், 5வது முகாமில் 22,52,641 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.