சென்னை: தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, அக்டோபர் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்தும், தியேட்டர்களில் 100 சதவிகிதம் இருக்கை வழங்குவது தொடர்பாகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அமைச்சர்கள் உயர்அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அக்டோபர் 31ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இடையில் கடந்த வாரம், கோவில்கள் திறப்பு உள்பட மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், நவம்பர் 1ம் தேதி முதல் 1ம் வகுப்பு முதல் அனைத்து வகுப்பினருக்கும் பள்ளிகளை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதால், சினிமா தியேட்டர்களை முழுமையாக திறக்க அனுமதிக்க வேண்டும் என்று திரையுலகினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகையும் வர இருப்பதால், மக்கள் கூட்டத்தை தவிர்க்க நடவடிக்கை எடுப்பது குறித்தும், தியேட்டர்களில் 100 சதவிகிதம் இருக்கைக்கு அனுமதிக்கலாமா? மற்றும் மேலும் தளர்வுகள் வழங்குவது தொடர்பாகவும் இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்படும் என தெரிகிறது.
அதையடுத்து, அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பான அறிவிப்பு குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.