சென்னை

திமுக செயலராகத் தனது மகன் துரை வையாபுரி நியமிக்கப்பட்டது குறித்து வைகோ பேட்டி அளித்துள்ளார்.

இன்று வைகோவின் மகன் மதிமுக தலைமை கழக செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.   இதையொட்டி வாரிசு அரசியல் குறித்து விமர்சித்த வைகோவின் கட்சியில் வாரிசு அரசியல் நடப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.  மேலும் அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெற உள்ளதாகவும் அதனால் மகனைச் செயலராக நியமித்ததாகவும் ஊகங்கள் கிளம்பின.

இது குறித்து வைகோ அளித்த பேட்டியில், “துரை வையாபுரி நியமனம் வாரிசு அரசியல் இல்லை.  கட்சியினர் தொடர்ந்து வற்புறுத்தியதால் என் மகன் அரசியலுக்கு வந்துள்ளார்.   நான் அவரை அரசியலுக்கு வர வேண்டாம் என 3 ஆண்டுகளாகத் தடுத்து இருந்தேன்.  ஆனால் அவருக்குப்  பொறுப்பு வழங்குவது குறித்த ரகசிய வாக்கெடுப்பில் அவருக்கு 104 பேர் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

தற்போது கட்சியின்  பொதுக் குழு அவருக்குச் செயலர் பதவி அளித்துள்ளது.  எனவே என்னால் இப்போது தடை சொல்ல முடியவில்லை.    தொண்டர்கள் விருப்பப்படி அவருக்குப் பதவி அளிக்கப்பட்டுள்ளது.  இதில் எனக்கு விருப்பம் இல்லை என்றாலும் தொண்டர்கள் விருப்பத்தை ஏற்றுக் கொண்டுள்ளேன்.

நான் மரணம் அடையும் வரை எனக்கு ஓய்வு கிடையாது.  மேலும் எனக்கு வயதாகவில்லை,  இன்னும் நான் இளமையாகவே இருக்கிறேன்.  நான் இப்போது கூட வாலிபால் விளையாடுகிறேன்.  ஆகவே நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்னும் ஊகத்துக்கு இடமே இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.