சென்னை

தமிழக அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமன வயது உச்ச வரம்பு 5 ஆண்டுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர் நியமனத்திற்கான வயது வரம்பு 57 ஆக இருந்தது. ஆசிரியர்களின் ஓய்வு வயது 58 ஆக இருந்த நிலையில், அதற்கு ஓராண்டு முன் வரை நியமனம் செய்யலாம் என்ற அரசாணை பின்பற்றப்பட்டு வந்தது. தற்போது தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்த்தப்பட்டதால் 59 வயது வரை பணி நியமனம் நடக்கலாம் எனப் பலரும் எதிர்பார்த்தனர்.

அதற்கு மாறாக ஆசிரியர்களின் வயது வரம்பை 40 எனப் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது. அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்தது. இதைத் தொடர்ந்து, ஆசிரியர்களின் நியமன வயது வரம்பை உயர்த்துவது தொடர்பாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான நியமன வயது உச்ச வரம்பை, 5 ஆண்டுகள் அதிகரித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதாவது ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பான உச்ச வயது வரம்பு, பொதுப் பிரிவினருக்கு 40ல் இருந்து 45 ஆகவும், இதரப் பிரிவினருக்கு 45ல் இருந்து 50 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.