சென்னை: கோவில்களை திறக்க வலியுறுத்தி போராட்டம் நடத்திய மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்  உட்பட 600 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா தொற்று காரணமாக, வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் கோவில்களை திறக்கக்கூடாது என்று தமிழகஅரசு தடை போட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக பாஜக சார்பில் கோவில்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னையில், பழம்பெரும் கோவிலான  மண்ணடி காளிங்கம்பாள் கோயில் முன்  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, தமிழகஅரசு மக்கள் குரலுக்கு செவி சாய்க்காவிடில் 10 நாட்களுக்கு பின் அரசே ஸ்தம்பிக்கும் அளவிற்கு போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அதுபோல, கோவையில் போராட்டம் நடத்திய கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்  உள்பட மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

இந்த நிலையில், போராட்டம் நடத்திய பாஜகவினர் மீது தமிழ்நாடு காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலை, இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி செல்வம் உள்பட  600 பேர் மீது  தொற்று நோய் தடுப்பு சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் கடற்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதுபோல, கோவையில் போராட்டம் நடத்திய கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் மீது பந்தயசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.