ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23.50 கோடியை தாண்டியது. கொரோனா உயிரிழப்பு 48லட்சத்தை கடந்துள்ளது. தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது. உருமாறிய வைரஸ்களில் ஆல்பா 193 நாடுகளிலும், பீட்டா 142 நாடுகளிலும், காமா 96 நாடுகளிலும், டெல்டா 187 நாடுகளிலும் பரவி இருக்கிறது என்று கூறி உள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் உகான் நகரில் இருந்து பரவத்தொடங்கி ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்டாலும் கூட தொற்றின் வீரியம் குறைந்தயாமல் உருமாற்றம் அடைந்து பல அலைகளாக தாக்கி வருகிறது. டெல்டா வகை கொரோனா பரவலால் ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் தொற்று பரவல் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. இந்த பரவலை கட்டுப்படுத்தே, தற்போதைய நிலையில், தடுப்பூசியால் மட்டுமே பாதுகாவலனாக உள்ளது. இதனால் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
தற்போது உலகளவில் கொரோனா பாதிப்பும், அதனால் ஏற்படுகிற உயிர்ப்பலியும் குறைந்து வருகிறது என உலக சுகாதார அமைப்பின் கொரோனா தொற்றுநோய் வாராந்திர நிலவர அறிக்கையில் தகவல் வெளியாகி இருக்கிறது.
உலகம் முழுவதும் இதுவரை 235,039,567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 48,05,090 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 211,790,531 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 18,443,946 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 18,355,398 (99.5%) பேர் லேசான தொற்று அறிகுறிகளுடனும்,188,548 (0.5%) பேர் கவலைக்கிடமான நிலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, செப்டம்பர் 20-26 வாரத்தில் உலகமெங்கும் புதிதாக 33 லட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். 55 ஆயிரம் பேர் இந்த தொற்றால் இறந்துள்ளனர். இந்த பாதிப்பும், இறப்பும் முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் 10 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும் உலகளவில் கொரோனா பாதிப்பும், இறப்பும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
கொரோனா பாதிப்பு தென்கிழக்கு மத்திய தரைக்கடல் நாடுகளில் அதிகபட்சமாக 17 சதவீதமும், மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் 15 சதவீதமும், வட-தென் அமெரிக்காவில் 14 சதவீதமும், தென் கிழக்கு ஆசியாவில் 10 சதவீதமும் குறைந்துள்ளது.
ஐரோப்பாவை பொறுத்தவரையில் முந்தைய வார நிலை தொடர்கிறது.
கோரோனா இறப்பை பொறுத்தமட்டில் ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவை தவிர்த்து பிற பகுதிகளில் 15 சதவீதம் சரிவு காணப்பட்டுள்ளது. அதிகபட்ச சரிவு என்றால் அது மேற்கு பசிபிக் பிராந்தியத்தில்தான். அங்கு முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் 24 சதவீதம் வீழ்ச்சி காணப்பட்டுள்ளது.
உருமாறிய வைரஸ்களில் ஆல்பா 193 நாடுகளிலும், பீட்டா 142 நாடுகளிலும், காமா 96 நாடுகளிலும், டெல்டா 187 நாடுகளிலும் பரவி இருக்கிறது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.