சென்னை: தமிழ்நாடு முழுவதும் நேற்று இரவு காவல்துறையினர் நடத்திய அதிரடி வேட்டையில் 560 ரவுடிகள் கைது செய்யப்பட்டு உள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொலைகள் அதிகரித்து வருகிறது. நெல்லையில் இரட்டை கொலை உள்பட பல இடங்களில் கொலை, கொள்ளை சம்பவங்கள் மீண்டும் தலை தூக்கின. இதை தடுக்கும் பொருட்டு டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டுள்ளார். அனைத்து மாவட்ட எஸ்.பிக்கள் மற்றும் காவல் ஆணையர்களுக்கு, ரவுடிகளை ஒடுக்க கடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, கடந்த 5 ஆண்டுகள் கொலை குற்றங்களில் ஈடுபட்டு வந்தவர்கள், ரவுடிகள் போன்றோரை கண்காணித்து, அவர்களை கைது செய்யவும், அவர்கள் பதுக்கி வைத்திருக்கும் ஆயுதங்களை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டது.
இதற்கான அதிரடி ஆபரேசன் நேற்று இரவு தொடங்கியது. மாநிலம் முழுவதும் உள்ள ரவுடிகளின் வீடு மற்றும் ஜாமீனில் வெளியே வந்த ரவுடிகளின் வீடுகளில் அந்தந்த மாவட்ட எஸ்.பி மற்றும் துணை ஆணையர் தலைமையிலான போலீசார் திடீரென அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையானது பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 870 ரவுடிகள் வீட்டில் நடத்தப்பட்டது.
சென்னை புளியந்தோப்பு பகுதியில் சுமார் 50 ரவுடிகளின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி, 5 பேர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அரியலூர் மாவட்டத்தில் 36 ரவுடிகளை காவல் நிலையங்களுக்கு அழைத்துச்சென்று போலீஸ் விசாரணை நடத்துகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 44 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் நேற்றிரவு 560 ரவுடிகளை கைது செய்து அவர்களிடம் இருந்து 256 அரிவாள்கள், 3 துப்பாக்கிகள், கஞ்சா பொட்டலங்கள், 250 கத்திகள், 3 நாட்டுத்துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.