சென்னை: தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில், ரூ.15லட்சம், தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்து வருபவர் வெங்கடாசலம். இவர், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையத்தை சேர்ந்தவர். இவர்மீது பல புகார்கள் உள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில் விதிகளை மீறி பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதில் முறைகேடு செய்தாகவும், லஞ்சம் பெற்றதாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் இன்று காலை அவரது இல்லம் மற்றும் அலுவலகத்தில் அதிரடியாக சோதனையில் இறங்கினர். இந்த சோதனையில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்த சோதனையில், அவரது வீட்டில் நடைபெற்று வரும் சோதனையில் ரூ.15 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், வெங்கடாசலம் வீட்டில் தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்களும் லஞ்ச ஒழிப்புத்துறை கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சோதனை தொடர்ந்து வருகிறது.