துபாய்: துபாயில் இன்று மாலை நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில், டெல்லி அணியும், ஐதராபாத் அணியும் மோதுகிறது. இந்த நிலையில், ஐதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜனுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால், ஐதராபாத் அணி அதிர்ச்சி அடைந்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்பட்டு, 4 மாதங்களுக்கு பிறகு தற்போது துபாயில் நடத்தப்பட்டு வருகிறது.  இன்று ஐபிஎல் போட்டியின் 33வது லீக் ஆட்டம் நடைபெறுகிறது. இன்றைய போட்டி  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கும்,  முன்னாள் ஐபிஎல்  சாம்பியனான  ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கும் இடையே நடைபெற உள்ளது.

ஏற்கனவே டெல்லி அணி  8 ஆட்டங்களில் விளையாடி 6-ல் வெற்றி, 2-ல் தோல்வி என்று 12 புள்ளிகள் எடுத்து முன்னிலையில் உள்ளது.  டெல்லி அணியின் கேப்டனாக  இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட்  உள்ளார்.  மேலும், ஷிகர் தவான், பிரித்வி ஷா, ஸ்டேராயாஸ் அய்யர் உள்பட பெரும் தலைகளும் உள்ளன.

ஐதராபாத் சன்சரைசர்ஸ் அணி இதுவரை ஆடிய  7 ஆட்டங்களில் 6ல் தோல்வியை சந்தித்து, ஐபிஎல் தர வரிசையில் கடைசி இடத்தை பிடித்துள்ளது.  அதனால், அடுத்து சர்ரைசர்ஸ் ஆட உள்ள 7 போட்டிகளிலும் வெற்றிபெற்றே ஆக வேண்டும். இல்லையென்றால்,  ‘பிளே-ஆப்’ சுற்றுக்குகூட வர முடியாது. இதனால் இன்றைய போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் டேவிட் வார்னர்  கேப்டனராக இருந்து வந்தார். தொடர் தோல்வி காரணமாக அவரை கேப்டன் பதவியில் இருந்து தூக்கிய அணி நிர்வாகம், அடுத்த கேப்டனாக கேன் வில்லியம்சன்-ஐ நியமித்து உள்ளது. இதற்கிடையில், அதிரடி ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோ விலகியதுதும் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், இன்று டெல்லியை ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி எதிர்கொள்கிறது. இந்த இக்கட்டான வேளையில், அணி வீரர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில், ஐதராபாத் அணியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான  தமிழ்நாட்டைச் சேர்ந்த  நடராஜனுக்கு கொரோனா பாசிடிவ் என சோதனை முடிவு வந்துள்ளது. இதனால், ஐதராபாத் அணி நிர்வாகத்துக்கும், அணியினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இருந்தாலும், இன்றைய போட்டி நடைபெறும் என்றும், நடராஜனுக்கு பதில் மற்றொரு வீரர் களிமிறக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டு  உள்ளது. இன்றைய ஆட்டத்தின்போது, தொடக்க ஆட்டக்காரர்களாக  டேவிட்  வார்னருடன், விருத்திமான் சஹா தொடக்க வீரராக இறங்குவார் என்று தெரிகிறது. மேலும், சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான், புவனேஷ்வர்குமார்,  சந்தீப் ஷர்மா, ஜாசன் ஹோல்டர் இருப்பதால், ஐதராபாத் அணி நம்பிக்கையுடன் இன்று டெல்லியை எதிர்கொள்கிறது.

இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் உதிக்குமா? என்பது இன்று இரவு தெரியவரும்,  இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.