கோத்தகிரி
கோடநாடு எஸ்டேட்டில் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டராக பணி புரிந்த தினேஷ்குமார் தற்கொலை வழக்கு மீண்டும் மறு விசாரணை செய்யப்படுகிறது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் வருடம் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்தன. அப்போது பல முக்கிய ஆவணங்கள் கொள்ளை அடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. முக்கிய குற்றவாளியான ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் சாலை விபத்தில் உயிர் இழந்தார். இதையொட்டி சயான், வாளையார் மனோஜ், திபு, உள்ளிட்ட 10 பேரை கோத்தகிரி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவர்களில் சயான் இவ்வழக்கு குறித்த உண்மைகளைத் தெரிவிக்க உள்ளதாகக் கூறி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததை அடுத்து அவர் கடந்த 17 ஆம் தேதி விசாரிக்கப்பட்டார். அத்துடன் அரசு வழக்கறிஞர்கள் மீண்டும் முழுமையான விசாரணையைத் தொடங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். எனவே மீண்டும் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. அத்துடன் எஸ்டேட்டில் கம்ப்யூட்டர் ஆப்பரேடராக பணி புரிந்த தினேஷ்குமார் தற்கொலையிலும் மர்மம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
எனவே தினேஷ்குமார் தற்கொலை வழக்கை மர்ம மரண வழக்காக மாற்றி விசாரிக்க அனுமதி கோரப்பட்டது. நேற்று அதற்கான அனுமதி கிடைத்ததால் தினேஷ்குமாரின் தந்தை போஜனிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடந்தது. அத்துடன் தனியார்ப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றும் தினேஷின் சகோதரி ராதிகாவுடனும் 3 மணி நேரம் விசாரணை நடந்துள்ளது.
இந்நிலையில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் கார் விபத்தில் இறந்த வழக்கையும் காவல்துறையினர் மீண்டும் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர் தவிரக் கேரளாவில் உள்ள குற்றவாளிகளிடம் மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. எனவே கோடநாடு கொலை , கொள்ளை வழக்கில் பல அதிர்ச்சி தரும் உண்மைகள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.