சென்னை
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தமிழகத்தின் பல பகுதிகளில் 4 நாட்களுக்குக் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் கன மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
நேற்று இரவு முதல் சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் பல பகுதிகளில் விடிய விடியத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாகத் தலைநகர் சென்னையில் விடாமல் கனமழை பெய்து வருகிறது. நகரில் கிண்டி, வடபழனி, கோயம்பேடு, அம்பத்தூர், எழும்பூர், மயிலாப்பூர், அடையாறு, வேளச்சேரி , போரூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
புறநகர் பகுதிகளான பல்லாவரம், அனகாபுத்தூர், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர் மழை பெய்து வருவதால் மக்கள் கடும் துயரத்துக்கு ஆளாகி உள்ளனர். தவிர திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் பல பகுதிகளில் மழை பெய்துள்ளது.