துரை

ஞ்சம் வாங்க அரசு அதிகாரிகள் கூச்சப்படுவதில்லை என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை விமர்சனம் செய்துள்ளது.

கலைச்செல்வி என்பவர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.  இவர் வாகன பதிவுக்கு லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதியப்பட்டு இவரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்தனர்.  இவர் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை நீதிபதி புகழேந்தி விசாரணை செய்து வருகிறார்.  வழக்கு விசாரணையில் கலைச்செல்வியின் வழக்கறிஞர், “மனுதாரரை லஞ்சம் வாங்கியதாக காவல்துறையினர் கைது செய்த போது அவரிடம் எந்த பணமும் இருக்கவில்லை.  ஆகவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என வாதிட்டார்.  இதற்கு அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

நீதிபதி புகழேந்தி, ”லஞ்சம் வாங்குவதற்கு அதிகாரிகள் கொஞ்சமும் கூச்சப்படுவதில்லை.  பெயரளவில் மட்டுமே லஞ்ச  ஒழிப்புத்துறை செயல்படுகிறது.  ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100 வழக்குகள் பதிவாகின்றன.  அவற்றை முறையாக விசாரிக்கவில்லை  ஒரு நபரைக் கைது செய்யும் போது அவரது வீடு மற்றும் அலுவலகங்களையும் அப்போதே சோதனை இட வேண்டும்.

மேலும் அந்த அதிகாரி வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளனரா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.  ஆனால் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் இவ்வாறு செயல்படுவதே இல்லை.  இதனால் லஞ்சம் அதிகரித்துள்ளது.    கைது செய்யப்பட்ட கலைச் செல்விக்கு தற்போது ஜாமீன் வழங்க முடியாது.” எனத் தெரிவித்தார்.  மேலும் அவர் இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்.