சென்னை: தமிழ்நாட்டில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருப்பதால் செப்டம்பர் 1ந்தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வகுப்புகளுக்கு ஆரம்ப நாட்களில் மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்த நிலையில், தற்போது 70 சதவிகிதம் வரை மாணவர்கள் வகுப்புக்கு வந்து படித்துச்செல்கின்றனர்.

இந்த நிலையில், 1ம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை நேரடியாக வகுப்புகளை தொடங்குவது குறித்து  பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் இன்று முற்பகல் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் தற்போது நடைபெற்று வரும் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகளில், மாணவர்களின் வருகை, கற்றல் கற்பித்தல் பணிகள், நோய் தொற்று குறித்து விவாதித்தார். மேலும் மற்ற வகுப்புகளை தொடங்குவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து இன்று பிற்பகல் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் மற்றும்  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.  இந்த ஆலோசனையின்போது, அடுத்தக்கட்டமாக 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்கலாமா? அதற்கான சாத்தியக்கூறுகள் எப்படி உள்ளது, கொரோனா தடுப்பு நடவடிக்கைள் குறித்தும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பெறப்பட்ட கருத்துக்கள் முதல்வரி மு.க.ஸ்டாலினிடம் அளிக்கப்படும் என்றும், அதையடுத்து, 6 முதல் 8ம் வகுப்புகள் திறப்பதற்கான தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து செய்தியளார்களிடம் பேசிய அமைச்சர், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்புவரை பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் அறிவிப்பார் என்றும், தற்போது 9முதல் 12 வரையிலான பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், குமரி மாவட்டத்தில் 87% மாணாக்கர்கள் பள்ளிக்கு வருகை தருகின்றனர் என்றும், குறைந்த பட்சமாக கோவையில் 67% பேர் வருகை தந்துள்ளனர் என்றும் தெரிவித்தார்..