டெல்லி: கொரோனா 3வது அலை இந்தியாவின் சில மாநிலங்களில் பரவத்தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், மாநில முதல்வர்கள் ஆக்சிஜன் விநியோகத்தை துரிதப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை துரிதப்படுத்துங்கள் என பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா 2வது அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. இதற்கு முக்கிய காரணம் ஆக்சிஜன் பற்றாக்குறையாகவே இருந்தது. இதையடுத்து, ஆக்சிஜன் தயாரிப்பதற்கான ஆலைகளை உருவாக்குவதில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டின. இதற்கிடையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப் படுத்தப்பட்டு உள்ளன. இதையடுத்து கட்டுக்குள் வந்த கொரோனா தற்போது, 3வது அலையாக பரவி வருகிறது.

மகாராஷ்டிரா, கேரளா உள்பட சில மாநிலங்களில் கொரோனா 3வது அலை பரவத்தொடங்கி உள்ளதாக உறுதி செய்யப்பட்டு உள்ளது. 3வது அலை குழந்தைகளை பாதிக்கும் என்பதால், தமிழகம் உள்பட பல மாநிலங்களில், அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், தற்போதைய கொரோனா சூழல் மற்றும் தடுப்பூசி நிலவரம் குறித்து உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி நேற்று காணொளி காட்சி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது அடுத்த சில மாதங்களுக்கு தேவையான ஆக்சிஜன் உற்பத்தி, விநியோகம் மற்றும் தடுப்பூசி உற்பத்தி குறித்தும்  கேட்டறிந்தார்.

இதையடுத்து, நாடு முழுவதும் ஆக்சிஜன் விநியோகத்தை துரிதப்படுத்த வேண்டும் என்றும் மாநிலங்களுக்கு ஆக்சிஜன் தங்குதடையின்றி கிடைக்க உறுதி செய்ய அதிகாரிகளை  அறிவுறுத்தினார். மேலும், நாடு முழுவதும் சுகாதார கட்டமைப்புகளை அதிகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.