சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வரும்10ந்தேதி முதல் 3 நாள் விடுமுறை விடப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். அதன்படி, 10,11,12 ஆகிய தேதிகளில் சட்டப்பேரவைக்கு விடுமுறை விடப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்டு மாதம் 13ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று காரணமாக, வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில், ஏற்கனவே பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் முடிவடைந்த நிலையில், மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் ஆகஸ்டு 20ந்தேதி முதல் நடைபெற்று வருகின்றன. வரும் 13-ம் தேதியுடன் சட்டப்பேரவை நிறைவடைய உள்ளது.
இந்த நிலையில், இன்றைய பேரவை கூட்டத்தில், சபாநாயகர் புதிய அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, வரும் 8-ஆம் தேதி ஒரு நாள் மட்டும் காலை, மாலை என இருவேளைகளிலும் சட்டப்பேரவை நடைபெறும், அதன்படி, 8-ஆம் தேதி காலை 10 மணிக்கும், மாலை 5 மணிக்கும் சட்டப்பேரவை நடைபெறும் என்று அறிவித்தார்.
மேலும், 10ந்தேதி விநாயகர் சதுர்த்திக்கு விடுமறை, மறுநாளான 11-ஆம் தேதி சனிக்கிழமை பேரவை அலுவல் கிடையாது என்றும், வரும் 10,11,12 ஆகிய தேதிகளில் சட்டப்பேரவைக்கு விடுமுறை விடப்படுவதாகவும் சபாநாயகர் அறிவித்துள்ளார்.