சென்னை: மோடி தலைமையிலான மத்தியஅரசுக்கு எதிராக 20ந்தேதி திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம் அறிவித்துள்ளது. மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து செப்டம்பர் 20-ஆம் தேதி திமுக உள்பட கூட்டணி கட்சிகள் தங்களது வீடுகள் முன்பு கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில், கடந்த 20ம் தேதி காணொலி வாயிலாக எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்திய தேசிய காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்பட 19 கட்சிகள், காணொலி வாயிலாக இக்கூட்டத்தில் பங்கேற்றன. அந்த கூட்டத்தில் , மத்திய பாரதிய ஜனதா அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து – செப்டம்பர் 20 முதல் 30 ஆம் தேதி வரை, நாடு தழுவிய போராட்டம் நடத்துவது என்று அனைத்து கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் சார்பில் போராட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
அதன்படி, மத்திய பா.ஜ.க. அரசின் செயல்களைக் கண்டித்து திமுக தலைமையிலான அனைத்து கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் மாநிலம் முழுவதும் வரும் 20ம் தேதி காலை 10 மணிக்கு தங்களின் இல்லம் முன்பு கருப்புக் கொடி ஏந்தி கண்டனப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொது செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஆர்.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர்மொகிதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் கூட்டாக அறிவிக்கை வெளியிட்டனர். அதில் கூறியிருப்பதாவது,
“காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியாகாந்தி அம்மையார் அவர்கள் தலைமையில் 20.08.2021 நடைபெற்ற இந்திய அளவிலான எதிர்கட்சித் தலைவர்கள் பங்கேற்ற காணொலி கூட்டத்தில், “மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வு தொடருவது, விலைவாசி உயர்வு, பொருளாதார சீரழிவு, தனியார்மயமாக்கல், வேலை இல்லாத் திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, பிகாசஸ் ஒட்டுக் கேட்பு” உள்ளிட்ட ஒன்றிய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத – ஜனநாயக விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து நாடு முழுவதும் செப்டம்பர் 20 முதல் 30ம் தேதி வரை பல்வேறு போராட்டங்களை நடத்துவது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி ஒன்றிய பா.ஜ.க. அரசின் செயல்களைக் கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான அனைத்து கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் மாநிலம் முழுவதும் 20-09-2021 (திங்கட் கிழமை) அன்று காலை 10.00 மணி அளவில், தங்களின் இல்லம் முன்பு கருப்புக் கொடி ஏந்தி கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டிட வேண்டும் என கேட்டுக் கொள்கிரோம். ஒருங்கிணைந்து போராடுவோம். மதசார்பற்ற – ஜனநாயக இந்தியக் குடியரசைப் பாதுகாப்போம்” எனத் தெரிவித்துள்ளனர்.
சோனியாகாந்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பரூக் அப்துல்லா, மெகபூபா முஃப்தி, ஹேமந்த்சோரன், சரத்யாதவ், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, திருமாவளவன், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.