மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், கலை இயக்குநராக தோட்டா தரணி, எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

ஒரே ஒரு போஸ்டரை மட்டும் வெளியிட்டுவிட்டு, ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. அதற்குப் பிறகு இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளதால், தனியாக போஸ்டர் வெளியிடப்படாமல் இருந்தது. சமீபத்தில் ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகத்துக்கான போஸ்டரைப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர். 2022-ம் ஆண்டு வெளியாகும் எனவும் அறிவித்துள்ளனர்.

ரூ. 800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இதுவரை 70 சதவீதம் முடிந்துள்ள நிலையில், இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை மத்திய பிரதேசத்தில் நடத்தவுள்ளார் இயக்குநர் மணிரத்னம்.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மத்தியபிரதேச மாநிலம் ஹரிகேஷ்வரில் நடைபெற்று வருகிறது.

கடந்த 5 நாட்களாக அங்குள்ள ராணி அகில்யாபாய் கோட்டை, அரண்மனை மற்றும் அவரால் அமைக்கப்பட்ட சிவன் கோவில்களில், படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இங்கு கார்த்தி, ரகுமானுடன் திரிஷா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

ஹரிகேஷ்வரில் நர்மதா நதியின் கரைகளில் பல சிவலிங்கங்கள் நந்தியுடன் அமைந்துள்ளன. கடந்த 1767-ம் ஆண்டு இந்த பகுதியை ஆண்ட ராணி அகில்யாபாயால் அமைக்கப்பட்ட சிவலிங்கங்கள் மற்றும் நந்தி ஆகியவை இந்துக்களால் புனிதமாக கருதப்படுகிறது. நேற்று அக்கரை பகுதியில் நடிகை திரிஷா ஒரு படகில் வருவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.

கரையில் வந்து இறங்கிய நடிகை திரிஷா கரையில் இருந்த ஒரு நந்தி மற்றும் சிவலிங்கத்துக்கு இடையே நடந்து வரும் காட்சியும் படமாக்கப்பட்டது. அப்போது நடிகை திரிஷா சிவலிங்கம், நந்தி சிலைகளுக்கு இடையே காலணியுடன் நடந்து வந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

நடிகை திரிஷா காலணியுடன் நடந்து வந்ததால் அந்த சிவலிங்கம் அவமதிக்கப்பட்டதாகவும், இதற்காக நடிகை திரிஷாவையும், இயக்குனர் மணிரத்னத்தையும் கைது செய்ய வேண்டும் என்றும் ஹரிகேஷ்வர் பகுதியை சேர்ந்த இந்து அமைப்புகள் போர்க்கொடி தூக்கி உள்ளன. இது தொடர்பாக ஹரிகேஷ்வர் போலீஸ் நிலையத்தில் இந்து அமைப்புகள் புகாரும் தெரிவித்துள்ளன.