சென்னை:
முன்னாள் முதல்வர் இபிஎஸ், வி.கே.சசிகலா மற்றும் பிற போலீஸ் அதிகாரிகளை விசாரிக்க அனுமதி கோரி, கொடநாடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தாக்கல் செய்த மனுவுக்கு, பதில் மனு தாக்கல் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
கோடநாடு கொள்ளை, கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், கோடநாடு கொள்ளை, கொலை வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி, முன்னாள் மாவட்ட ஆட்சியர் சங்கர், முன்னாள் எஸ்.பி. முரளி ரம்பா, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரை விசாரிக்க வேண்டும். காணாமல் போன பொருட்கள் எவை என்பது பற்றி சசிகலா, இளவரசிக்குத் தான் தெரியும் என்றும் தெரிவித்து உள்ளனர். மேலும் இந்த வழக்கின் தீவிரத்தைப் பரிசீலிக்க நீலகிரி நீதிமன்றம் தவறிவிட்டது. புலன் விசாரணைக் குழு வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளவில்லை. முக்கிய குற்றவாளிகளை விட்டுவிட்டது என கூறப்பட்டுள்ளது.
இந்த மனு உயர்நீதிமன்றத்தில் நீதிபதி நிர்மல்குமார் முன்பு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கொடநாடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தாக்கல் செய்த மனுவுக்கு, பதில் மனு தாக்கல் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணை வரும் 26 க்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரிக்க மேலும் 4 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.