சென்னை: தமிழகத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருப்பதால், செப்டம்பர் 1ந்தேதி முதல் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலும், கல்லுரிகளிலும் நேரடி வகுப்புகளை நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதையொட்டி பள்ளிகள் திறப்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், நெல்லையை சேர்ந்த அப்துல் வஹாப் என்பவர். மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல மனுத் தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில்,18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக இதுவரை தெளிவான முடிவுகள் எட்டப்படவில்லை. தடுப்பூசிகள் செலுத்தப்படாமல் மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்வதால் கொரோனா தொற்று அதிகரிக்க செய்ய வாய்ப்பு உள்ளது. சுழற்சி முறையில் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றால் ஒரு வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு இடையிடையே கற்றலில் வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இது ஆசிரியர்களுக்கு கூடுதல் சுமையாகவும் அமையும். அனைத்து மாணவர்களுக்கும் நேரடியாக பள்ளிக்கு வரவேண்டும் என வற்புறுத்தாமல் ஆன்லைன் வழியாக வகுப்புகளை கவனிக்க விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான வாய்ப்புகளை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.