புதுடெல்லி: 
சுதந்திர தின விழா கொண்டாட்டமான ‘ஆசாதி கா அமிர்த மஹோத்ஸவ்’ பேனரிலிருந்து ஜவஹர்லால் நேருவின் புகைப்படத்தைத் தவிர்த்ததற்காக, மோடி அரசுக்குக் காங்கிரஸ் தலைவர்கள் கடுமையான கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.
இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலின் (ICHR) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த பேனரில் மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், நரசிம்மராவ், பகத் சிங், விநாயக் தாமோதர் சாவர்க்கர் மற்றும் பிறரின் படங்கள் உள்ளன, ஆனால் அதில் நேருவின் படம் இடம்பெறவில்லை.
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர்   தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில்,  இந்தியச் சுதந்திரத்தின் முன்னோடி குரலான ஜவஹர்லால் நேருவைத் தவிர்த்து சுதந்திர தினத்தைக் கொண்டாடுவது வெறும் அற்பமானது மட்டுமல்ல, வரலாற்றுக்கும் மாறானது. இது ICHR தன்னை இழிவுபடுத்தும் மற்றொரு சந்தர்ப்பம். இது ஒரு பழக்கமாகி வருகிறது!” எனத் தெரிவித்தார்.